"வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்'
வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை
தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து,
அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல்
அச்சிடும் பணி முடிந்துள்ளது.
"ஓட்டுக்கு பணம் வாங்காதீர்' : சில தொகுதிகளில்
மட்டும், பணி நடந்து வருகிறது. அதேபோல், வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய,
"பூத் சிலிப்' அச்சிடப்பட்டுள்ளது. இதை, வீடு வீடாகச் சென்று
வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், இன்று துவக்கி,
19ம் தேதிக்குள் முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. "பூத் சிலிப்'
வெள்ளை நிற காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதில், வாக்காளர் பெயர்,
முகவரி, பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பின்புறம், "ஓட்டுக்கு
பணம் வாங்காதீர்' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். "பூத் சிலிப்'
கிடைக்கப் பெறாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்தல் அன்று, ஓட்டுச் சாவடியிலும் வழங்கப்படும்.
ஓட்டுச்சாவடிக்குள் யாரும், மொபைல் போன்
எடுத்து செல்லக் கூடாது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்து,
வேட்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் கூடுதல் பாதுகாப்பு
கேட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வு செய்யப்படும் : ஓட்டுச்சாவடியை
கைப்பற்றும் சம்பவம் நடந்தால், அந்த ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு
நடத்தப்படும். அத்துடன், ஓட்டுச்சாவடி அலுவலர், "டைரி' மற்றும் அங்கு பதிவு
செய்யப்படும் வீடியோ காட்சிகள், மறுநாள் ஆய்வு செய்யப்படும். அப்போது,
தவறு ஏதும் நடந்திருப்பதாக தெரிய வந்தாலும், சம்பந்தப்பட்ட
ஓட்டுச்சாவடியில், மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இவ்வாறு, பிரவீன்குமார்
தெரிவித்தார்.
11 ஆவணங்கள் செல்லும் : புகைப்படத்துடன் கூடிய,
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம்,
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள,
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலையங்கள்,
புகைப்படத்துடன் வழங்கியுள்ள கணக்கு புத்தகம், பான் கார்டு, ஆதார் கார்டு,
ஸ்மார்ட் கார்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, மருத்துவ
காப்பீடு அடையாள அட்டை, பென்ஷன் ஆவணம், தேர்தல் கமிஷன் வழங்கும், "பூத்
சிலிப்' ஆகியவற்றை கொண்டு, ஓட்டு போடலாம். இதில் எதுவும் இல்லையென்றால்,
ஓட்டு போட முடியாது.
No comments:
Post a Comment