Pages

6 March 2012

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் மன்னர் கால தபால் பெட்டி

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் மன்னர் கால தபால் பெட்டி ஒன்று புதுப்பொலிவுடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போதும் மாவட்டத்தில் சிறப்பான தபால் சேவை நடைபெற்றது. இதற்காக பல்வேறு இடங்களில் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன. இரும்பினால் ஆன மோல்டிங் செய்யப்பட்ட மிகவும் உறுதியான தபால் பெட்டிகள் அப்போது பயன்படுத்தப்பட்டன.


நாகர்கோவிலில் ஒரு சில இடங்களில் இதுபோன்ற மன்னர் கால தபால் பெட்டிகள் இப்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவை பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் கடுக்கரை பகுதியில் பராமரிப்பின்றி காணப்பட்ட தபால் பெட்டி ஒன்றை தபால் ஊழியர்கள் எடுத்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வைத்திருந்தனர். இங்கு வந்த உயர் அதிகாரிகள் அந்த தபால் பெட்டியை பயனுள்ள வகையிலும், பழமையான பொக்கிஷத்தை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க கோட்ட தபால் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த தபால் பெட்டி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தின் முன்பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வர்ணம் பூசப் பட்டு தபால்கள் போடும் வகையில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இந்தியா போஸ்ட் என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் புதிதாக எழுதப்பட்டுள்ளது. 

source : Dinakaran

No comments:

Post a Comment